டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தும் முன்பாக மாணவர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் நேரத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தலாம், மாணவர்களின் எதிர்காலம் வீணாகக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, செப்டம்பர் 1, 6 தேதிகளில் ஜேஇஇ தேர்வும், செப்டம்பர் 27ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13ம் தேதி நீட் நுழைவுத் தேர்வும் நடக்கிறது.

இந்நிலையில் இந்த தேர்வுகள் நடத்தும் முன்பு மாணவர்களிடம் மத்திய அரசு கருத்துகளை கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான மாணவர்களே, நீங்கள் இப்போது மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளீர்கள், அதனை  உணர்கிறேன். இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்பட வேண்டும், எங்கு நடத்தப்பட வேண்டும் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கும் மிக முக்கிய பிரச்னை.

நீங்கள் எங்கள் எதிர்காலம். சிறந்த இந்தியாவை உருவாக்க  உங்களை நம்பி இருக்கிறோம். எனவே, உங்கள் எதிர்காலம் குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்பட வேண்டுமானால், அது உங்கள் ஒப்புதலுடன் எடுக்கப்படுவது முக்கியம். அரசாங்கம் உங்களுக்குச் செவிசாய்க்கும், உங்கள் குரல்களை கேட்கும், உங்கள் விருப்பப்படி செயல்படும் என்று நம்புகிறேன். இது அரசாங்கத்திற்கு எனது அறிவுரை. நன்றி. ஜெய் ஹிந்த் என்று கூறியுள்ளார்.