டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 80 வயதான மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு கிறது.

24 ஆண்டுகளுக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் (17ந்தேதி)  நடைபெற்றது. தலைவர் பதவியை பிடிக்க மூத்த காங்கிரஸ் தலைவர்களான கார்கே தரூர்  இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து,   டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் வாக்குப்பதிவு 17ந்தேதி  காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை  நடைபெற்றது. டெல்லியில் காங்கிரஸ் இடைக்கா தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வாக்களித்தனர், ராகுல்காந்தி நடைபயணத்தன்போது, கர்நாடக மாநிலத்தில் கண்டெய்னர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். வாக்களிக்க மொத்தம் மொத்தம் 9,900 காங்கிரஸ்  நிர்வாகிகள்  தகுதி பெற்ற நிலையில், 9,500 பேர் வாக்களித்ததாகவும், அதாவது 95சதவீத வாக்குப் பதிவு  நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்டு, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு நேற்று செல்லப்பட்டது. இந்த வாக்குப் பெட்டிகளில் உள்ள வாக்குச் சீட்டுகள் இன்று ஒன்றாக கலக்கப்பட்டு எண்ணப்படுகின்றன.  வாக்குச்சீட்டு எண்ணிக்கை முடிவடைந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை குறித்து கருத்து தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, இது உட்கட்சி தேர்தல் நட்புரீதியாக போட்டியிடுகிறோம். சசி தரூர் என்னை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். நானும் அவருக்கு வாழ்த்துகூறினேன் என்றார். அதேபோல, சசிதரூர் சொல்லும்போது, காங்கிரஸின் தலையெழுத்தை தொண்டர்கள் முடிவு செய்வார்கள். கட்சியில் மாற்றம் தொடங்கி உள்ளது. தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றார். இருந்தாலும்,   வாக்குப்பதிவு நாளில் முறைகேடுகள் நடந்ததாக தரூர் முகாம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் கார்கே பெருவாரியான வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக காலை முதலே தகவல்கள் வெளியான நிலையில், மதியம் 1.30 மணி அளவில் கார்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  7,897 வாக்குகள் பெற்று கார்கே வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் பெற்றுள்ளார். 400 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மல்லிகார்ஜூன கார்கே காந்தி குடும்பத்தின் ‘அதிகாரப்பூர்வமற்ற அதிகாரப்பூர்வ வேட்பாளராக’ கருதப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக ஏராளமான மூத்த தலைவர்கள், தரூர் தன்னை மாற்றத்தின் வேட்பாளராக முன்னிறுத்தினார். ஏறக்குறைய 137 ஆண்டுகால வரலாற்றில், கட்சியின் தலைவர் யார் என்பதை தேர்தல் போட்டி முடிவு செய்வது இது ஆறாவது முறையாகும்.

மல்லிகார்ஜுன் கார்கே ஒரு மூத்த கர்நாடக அரசியல்வாதி மற்றும் 16 வது மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். முன்னதாக, அவர் 2014 முதல் 2019 வரை மக்களவையில் INC தலைவராக பணியாற்றினார்.  கர்நாடக மாநிலம் குல்பர்கா தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய அரசின் முன்னாள் ரயில்வே அமைச்சரும் ஆவார். கட்சியின் திறமையான தலைவராகக் கருதப்படுகிறார் மற்றும் அரசியல், சட்டம் மற்றும் நிர்வாகத்தின் இயக்கவியலில் நன்கு அறிந்தவர்.

வரலாறு காணாத 9 முறை சட்டமன்றத் தேர்தல்களிலும், சமீபத்திய பொதுத் தேர்தல்களிலும் குல்பர்காவிலிருந்து 10முறை தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் கர்நாடகாவில் இருந்து ஒரு தாழ்த்தப்பட்ட சாதி எம்.பி. 40 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும், 5 ஆண்டுகள் எம்பியாகவும் இருந்தார். தற்போது,  2021 முதல் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.  நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.