டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக அஜய் மக்கான் நியமனம் செய்து, கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளராக பவன்குமார் பன்சால் இருந்து வந்த நிலையில், புதிய பொருளாளராக அஜய் மக்கானை கட்சித் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே நியமித்துள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகப் பதவி வகித்து வந்த அகமது படேல் கடந்த 2020-ல் காலமானதையடுத்து, புதிய இடைக்கால பொருளாளராக  பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு  பதிலாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கன் புதிய பொருளாளராக ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

ராகுல் காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக உள்ள அஜய் மக்கான், சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கனை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக நியமித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேசி வேணுகோபால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  பதவி விலகும் பொருளாளர் பவன்குமார் பன்சாலின் பங்களிப்பை கட்சி பாராட்டுகிறது என்றும்,  முன்னாள் மத்திய அமைச்சரான அஜய் மக்கான், இதற்கு முன்பு டெல்லி பிரிவு தலைவராக பணியாற்றியவர், மேலும் டெல்லியில் ஷீலா தீட்சித்தின் அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

அஜய் மக்கன் முன்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) பொதுச் செயலாளராகவும், காங்கிரஸ் செயற்குழு (சிடபிள்யூசி) உறுப்பினராகவும் இருந்தார். பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.