சென்னை:
நாளை நடக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மனசாட்சியோடு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி. கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நாளை நடக்க உள்ளது. தேசிய மாநில நிர்வாகிகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் என 9,300 பேர் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 710 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்காக, சென்னையில் உள்ள கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. 710 பேருக்கும் அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கேரள காங்கிரஸ் நிர்வாகி நெய்யாற்றங்கரை சணில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஞ்சலி நிம்பல்கர் ஆகியோர் தமிழகத்திற்கான தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சோனியா ராகுல் வெளிப்படையாக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஆனாலும் சோனியா ராகுலின் வேட்பாளராகவே கார்கே போட்டியிடுவதாக காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தகுதி உடையவர்கள் மனசாட்சிப்படி ஓட்டளிக்க வேண்டும் என்றும்,
சசிதரூருக்கு நான் ஆதரவு தெரிவித்துள்ளேன். மற்றவர்களும் சசிதரூருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.