சென்னை:  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. இது காங்கிரஸ் தொண்டர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை என  அறிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, இந்த இடைத்தேர்தலில், . ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்தியா கூட்டணியின் தமிழக தலைவராக உள்ள முதல்வர் ஸ்டாலின் கோரியதையடுத்து முடிவு அகில இந்திய காங்கிரஸ் தலைமை இதை முடிவு செய்துள்ளதாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த இருமுறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வேண்டும் என அந்த தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். இதை மீறி, தற்போது அந்த தொகுதி திமுகவுக்கு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என  தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

வேட்புமனு தாக்கல் தொடங்கியதை தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரத்தையும், கட்சி பற்றிய விவரத்தையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தீவிர ஆலோசனைக்குப் பின் அத்தொகுதியை திமுகவுக்கு வழங்கியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில் ” 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் .மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” எனவும் அறிக்கையில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.