புதுடெல்லி: 
பிரசாந்த் கிஷோரின் விளக்கக்காட்சி குறித்த விரிவான அறிக்கையைக் காங்கிரஸ் குழு சமர்ப்பித்தது, சோனியா காந்தி இறுதி முடிவை மேற்கொள்ள உள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு சோனியா காந்தியைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் வியூகம் குறித்து பிரசாந்த் கிஷோர் விரிவான விளக்கத்தை அளித்திருந்தார்.

அப்போது 370 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள இடங்களில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டாவது முறையாகக் கடந்த 19ஆம் தேதி மீண்டும் சோனியாவிடம் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார்.

இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் பரிந்துரைத்தபடி, மறுமலர்ச்சித் திட்டத்தை வகுப்பதற்காக, தலைவர் சோனியா காந்தியால் பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, பி.சிதம்பரம், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு  கிஷோரின் ஆலோசனைகள் குறித்த விரிவான அறிக்கையாக,  தங்கள் கருத்தைச் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில்,  இந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், சோனியா காந்தி இறுதி முடிவை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் கிஷோர் பரிந்துரைகளில், பெரும்பாலான பரிந்துரைகள் நடைமுறைப் படுத்த கூடியவையாகவும், பயனுள்ளவையாகவும் இருப்பதாக பிரியங்கா காந்தி வத்ரா, கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, பி.சிதம்பரம், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் அடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.