கர்நாடகா : மதமாற்றத் தடை மசோதாவுக்குக் காங்கிரஸ் எதிர்ப்பு

Must read

பெங்களூரு

ர்நாடக அரசின் கட்டாய மத மாற்றத் தடை சட்ட மசோதாவுக்குக் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இந்துக்களை கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதாகப் புகார்கள் வருகின்றன.  முதல்வர் பசவராஜ் பொம்மை  கட்டாய மதமாற்றம் குறித்த தகவல்களைச் சேகரிக்க மாவ‌ட்ட ஆட்சியர்களுக்கு  உத்தரவிட்டார்.  தவிர வட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை ஆய்வுசெய்து, புதிய சட்டத்தை உருவாக்குமாறு சட்ட நிபுணர்களுக்கு உத்தரவிட்டார்.

கிறிஸ்தவ அமைப்பினரும் ஆயர் கூட்டமைப்பும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இச் சட்டத்தால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றும் அரசியலமைப்பு சாசனம் வழங்கிய உரிமையைப் பறிப்பதாக உள்ளதாகவும் கூறி பெங்களூருவில் கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

கர்நாடகா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.  அப்போது கட்டாய  மதமாற்றத் தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், “கர்நாடகாவை ஆளும் பாஜக, சிறுபான்மையினரைக் குறிவைத்து கட்டாய மதமாற்ற சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு கிறிஸ்தவர்களை ஒடுக்க அரசு முடிவெடுத்துள்ளது.  கடந்த சில மாதங்களாக பஜ்ரங்தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் கிறிஸ்தவர்களைத் தாக்கி வருகின்றனர். காங்கிரஸ் இந்த சட்டத்தை  எதிர்க்கிறது.  நாங்கள் எக்காரணம் கொண்டும் இதை அமல்படுத்த விட மாட்டோம்” எனக் கூறி உள்ளார்.

More articles

Latest article