டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக, ஜூன் 27ந்தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

ராணுவத்தில் 4ஆண்டுகள் ஒப்பந்த முறையில்சேவையாற்றும் வகையில் ‘அக்னிபாத்’ என்னும் புதிய திட்டத்தை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டெல்லி, பீகார், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலுங்கானா, அரியானா போன்ற மாநிலங்கள் இளைஞர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விரும்பும் வீரர்களின் வயது உச்ச வரம்பு 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவோருக்கு அசாம் ரைஃபில் படை பிரிவில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடம் வழங்கப்படாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 27ந்தேதி அன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.