டெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி நேற்று இரவு திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்ததுடன்,  அவர்களுடன் கலந்துரையாடினார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அவ்வப்போது திடீர் திடீரென சாமானிய மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். ஏற்கனவே பல இடங்களுக்கு சென்று மாணவ மாணவிகள், ஏழை மக்கள் உள்பட பலரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த நிலையில், சமீபத்தில் லாரி டிரைவர், செருப்பு தைக்கும் தொழிலாளி, ரெயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளர்களை போன்றவர்களை திடீரென சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு (ஜனவரி 16ந்தேதி) திடீரென  தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு   சென்றார். எய்ம்ஸ் மருத்துவமனையைச் சுற்றியுள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதுதொடர்பான வீடியோ   ராகுல் காந்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அத்துடன் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நான் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சைக்காக வந்த நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். அவர்கள் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குளிர்ந்த நிலம், பசி மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் சுடரை எரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மத்திய அரசும், டெல்லி அரசும் பொதுமக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளன என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எய்ம்ஸ்  நோயாளி ஒருவர் கூறும்போது, “அவர் (ராகுல்)  இங்கே நான் தங்கியிருப்பது பற்றி என்னிடம் கேட்டார். என் மகள்களின் சிகிச்சை பற்றியும் கேட்டார்.” “அவர் என் தொலைபேசி எண்ணைக் கேட்டார், மேலும் அவரது குழு என்னைத் தொடர்பு கொண்டு முடிந்தவரை எனக்கு உதவும் என்று கூறினார்….”

மற்றொரு நோயாளி, பவன் குமார்  என்பவர்,  “என் மகளுக்கு 13 வயது, அவள் ஒரு இரத்த புற்றுநோய் நோயாளி. நாங்கள் டிசம்பர் 3 அன்று இங்கு வந்தோம், அதன் பின்னர் சரியான சிகிச்சை இல்லை என குற்றம் சாட்டினார். அவரிடம்  “ராகுல் காந்தி என் மகளின் சிகிச்சைக்கு பண உதவி வழங்குவதாக உறுதியளித்தார்” என்று சிறுமியின் தாயார் ஆஷா தேவி கூறினார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி,   “சிகிச்சைக்காக பல மாதங்களாகக் காத்திருத்தல், சிரமம் மற்றும் அரசாங்கத்தின் உணர்வின்மை – இதுதான் இன்றைய டெல்லி எய்ம்ஸின் யதார்த்தம். தங்கள் அன்புக்குரியவர்களின் நோயின் சுமையைத் தாங்கி தொலைதூர இடங்களிலிருந்து வந்த மக்கள் இந்த குளிரில் நடைபாதைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.”  என்று தெரிவித்துள்ளது.