டெல்லி: அக்னிபாத் திட்டம், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், நேற்று மாலை பேரணியாக சென்ற குடியரசு தலைவரிடம் மனு வழங்கினர். இந்த சந்திப்பின்போது, குடியரசு தலைவரிடம் முறையிட்டது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று டெல்லி ஜந்தர்மந்தரில் சத்தியாகிரஹ போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தொர்ந்து, நேற்று மாலை ஊர்வலமாக சென்று நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.
காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் பி.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றனர். இவர்கள் குடியரசு தலைவரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரிய போராட்டத்தின் போது, கட்சி எம்.பி.க்களை போலீஸார் மோசமாக நடத்தப்பட்ட விவகாரம், ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணை செய்கின்ற விவகாரம் போன்றது குறித்து பேசியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ராஜ்யசபா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “அக்னி பாத் திட்டம் குறித்து மத்திய அரசு எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை. பாராளுமன்றத்திலும் இந்த திட்டம் சமர்பிக்கப்படவில்லை. இதை ஜனாதிபதியிடம் விளக்கமாக எடுத்துரைத்தோம், மத்தியஅரசின் செயல், எம்.பி.க்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் என்பதை சுட்டிக்காட்டியதுடன், அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியதாகவும், இதை கவனத்தில் எடுத்து தக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “காங்கிரஸ் தலைவர்கள் மீதான போலீஸ் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித் தோம். இதுகுறித்து விசாரணை நடத்தி, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இதுபற்றி பரிசீலித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், முதல்வர்கள் உட்பட லோக்சபா பாராளுமன்ற தலைவர்8 தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 7 உறுப்பினர் பிரதிநிதிகள் குழு 2 குறிப்புகளை சமர்ப்பிக்க மாண்புமிகு ஜனாதிபதியை சந்தித்தது.
1. ஆயுதப்படைகளின் நலனில் சமரசம் செய்யாமல், அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெறவும், பரந்த ஆலோசனைகளை நடத்தவும், தரம், செயல்திறன் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கவும் அரசாங்கத்தை வலியுறுத்துங்கள்.
2. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் டெல்லி காவல்துறை, காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான மற்றும் தூண்டப்படாத தாக்குதலுக்கு எதிராக வலுவான சாத்தியமான எதிர்ப்பைப் பதிவு செய்யவும், சிறப்புரிமை மீறல் குறித்த சிறப்புரிமைக் குழுவின் காலக்கெடுவிற்குள் விசாரணையை உறுதி செய்யவும்
என முறையிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.