டில்லி:

ர்நாடகாக மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ள நிலையில், அங்கு குமாரசாமி ஆட்சி பெரும்பான்மை இழக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையில், பாரதியஜனதா கட்சி, ஆட்சி அமைக்க கவர்னரிடம் மனு கொடுத்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராஜினாமா தொடர்பாக எம்எல்ஏக்கள் இன்று மாலை 6 மணிக்குள் கர்நாடக சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றமும் தீர்ப்பு கூறி உள்ளது.

இதற்கிடையில் கோவா மாநிலத்திலும்,  10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரதியஜனதா கட்சியில் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.  இதுபோன்ற செயல்களுக்கு பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

பாரதியஜனதா கட்சியின்  நடவடிக்கையை கண்டித்து காங்கிரசார் கோவா, கர்நாடக மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலை காங்கிரஸ் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள  காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா-ராகுல் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.பி.க்கள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மார் 30 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள், “ஜனநாயகத்தை காப்பாற்று” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.