டில்லி

கிரிக்கெட் சீருடை நிறம் மாற்றம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வரும் 30 ஆம் தேதி அன்று இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன.   அந்த போட்டியில் இந்திய அணியினர் புதிய சீருடையான ஆரஞ்சு நிற சீருடை அணிந்து விளையாட உள்ளனர்.   இந்த நிறம் மாற்றம் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டில் அனைத்து இடங்களிலும் காவி மயமாக்க முயலுவதாகவும் அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் சீருடை நிறம் காவியாக மாற்றப்பட்டதாகவும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, “இந்திய அணியின் சீருடை நிறத்தை யார் மாற்றியது? இந்திய அரசா அல்லது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமா?  இதில் வீரர்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை எனில் மற்றவர்கள் ஏன் எதிர்க்கப் போகிறார்கள்?

காங்கிரஸாகிய நாங்கள் இந்தியா நன்கு விளையாட வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.   அத்துடன் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறோம்” என இந்த சீருடை நிறம் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.