போபால்

த்தியப் பிரதேச சட்டப்பேரவை பசுக்காவலர்களுக்கு தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு  ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு பசுவதைக்கு எதிரான சட்டத்தை அமுலாக்கிய பிறகு நாட்டில் பல பசுக் காவலர்கள் தோன்றி உள்ளனர்.   இவர்கள் பசுக்களை ஓட்டிச் செல்லும் அனைவரையும் தடுத்து நிறுத்தி  வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.  பல இடங்களில் பசுக்களை விற்பனைக்கு மற்றும் இட மாற்றம் செய்ய எடுத்துச் சென்றவர்களும் இந்த கும்பலால் தாக்கப்பட்டனர்.

இது குறித்து கடந்த 2018 ஆம் வருடம் ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “பசுக்காவல் என்னும்  பெயரில் கும்பல் வன்முறைகளை சட்டம் பொறுத்துக் கொள்ளாது.  இது போன்ற பசுக் காவலர்கள் கும்பல் கொலை செய்வதை தடுக்க நாடாளுமன்றம் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

அதை ஒட்டி மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில விலங்குகள் நலத்துறை அமைச்சர் லகன் சிங் யாதவ், “உச்சநீதிமன்றத்தில் பசு காவலர்கள் என்னும் பெயரில் கும்பல் வன்முறைக் கொலைகளில் ஈடுபடுவோரை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவு இடப்பட்டது.   உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க இந்த சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி பசு  பாதுகாப்பு என்னும் பெயரில் வன்முறைகள் செய்வோருக்கு ஒன்று முதல் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனையும் ரூ.50000 அபராதமும் விதிக்கப்பட உள்ளது.   இந்த பசுக் காவலர்கள் என சொல்லிக் கொள்பவர்களுக்கு பசுக்களை கொல்ல ஓட்டி செல்கின்றனரா அல்லது வெட்ட எடுத்துச் செல்கின்றனரா என்பது தெரிவதில்லை.

அத்துடன் ஒவ்வொரு முறையும் இதற்கான ஆவணங்களை பசுக்களை எடுத்துச் செல்வோர் கையில் வைத்திருக்க முடியாது.  இதை தெரிந்துக் கொள்ளாமல் அவர்களை பசு காவலர்கள் தாக்குகின்றனர்.   இந்த சட்டத்தின் மூலம் இவ்வாறு பசுக்களை எடுத்துச் செல்வோருக்கு பாதுகாப்பு கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டம் இயற்றப்படுவது இந்தியாவில் முதல் முறை ஆகும்.