டில்லி:

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது. நாளை மறுதினம் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 23ந்தேதிவாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலை வர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பை  பாராட்டிய ராகுல்,  பிரதமர் மோடி எனது குடும்பத்தினரை விமர்சிப்பது குறித்து எனக்கு பிரச்னையில்லை. ஆனால், நான் அவரது குடும்பத்தினரை மதிக்கிறேன் என்று கூறினார்.
மே 23-ம் தேதி மக்கள் முடிவெடுப்பார்கள். அதன் அடிப்படையிலேயே நாங்கள் செயல்படுவோம் என்று நான் தெளிவாக கூறியுள்ளேன்.

கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் தனது பணியை சிறப்பாக செய்துள்ளது என்று தெரிவித்த ராகுல்  எதிர்க்கட்சியாக காங்கிரசின் பணி ஏ கிரேடாக இருந்ததாகவும் பெருமிதமாக கூறினார்.

இந்த தேர்தலில், தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்படுகிறது. பிரதமர் மோடி என்ன பேச வேண்டுமோ அதை பேசலாம். ஆனால், அதையே நாங்கள் பேசினால் தடுத்து நிறுத்தப்படுகிறோம். மோடியின் பிரசாரத்துக்கு ஏற்ப தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் உற்று நோக்குகிறார்கள். மோடி என்ன பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை. மக்கள் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம்.

இந்தியாவின் அமைப்புகளை ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் மோடியிடம் இருந்து பாதுகாத்தோம். இந்திய ஜனநாயகத்தின் பெருமையாக விளங்கும் உச்சநீதிமன்றம், ஆர்பிஐ போன்ற அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ராகுல் கூறினார்.