சென்னை:
ரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே நிற்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொகுதியில் கடந்த முறை தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டதால், இந்த முறை காங்கிரஸ் களமிறங்குமா அல்லது தி.மு.க.,வே நேரடியாக களமிறங்குமா என எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

இந்தநிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. எனவே இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். தி.மு.க மற்றும் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களை வியாழன் மாலை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்க உள்ளேன், என்று தெரிவித்தார்.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது.

இந்தநிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரை கட்சியின் தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.