சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்க காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மதுவிலக்கு, ஆணவப்படுகொலை தடுப்பு, நீட் ரத்து, வேளாண் பாதுகாப்பு மசோதா உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன்படி,தேர்தல் அறிக்கையில் 27 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு
விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.
மாதம் ஒருமுறை விசைத் தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநங்கைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும்.
பணியின்போது பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய நிவாரணமும், பணியின் போது இறக்க நேரிடும் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.