டில்லி

மூத்த அதிகாரிகளுக்கு விசாரணை இன்றி கட்டாய ஓய்வு அளிப்பதாக மோடி அரசுக்கு  காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஊழல் புகாரில் சிக்கி உள்ள அரசு அதிகாரிகளுக்கு பாஜக அரசு கட்டாய ஓய்வு அளித்து பதவி நீக்கம் செய்து வருகிறது.   இவ்வரிசையில் சமீபத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று நேரடி வரி விதிப்பு வாரிய மூத்த அதிகாரிகள் 15 பேர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர்.  இவர்களில் முதன்மை ஆணையர், ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர் என பல பிரிவினரும் உள்ளனர்.

இதற்கு முன்பு அரசு 49 முதல் தர வரிசை அதிகாரிகளைக் கட்டாய ஓய்வில் அனுப்பியது.  இந்த அதிகாரிகளில் பெரும்பாலானோர் லஞ்ச வழக்கில் அனுப்பப்பட்டுள்ளனர்.   லட்சக்கணக்கில் ஊதியம் பெறும் ஒரு அதிகாரி ரூ.15000 லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றத்தில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.   இது நாடெங்கும் சர்ச்சையை உண்டாக்கியது..

இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி, “விதி எண் 311ன் கீழ் பல அதிகாரிகளை இந்த அரசு பணி நீக்கம் செய்துள்ளது.  இந்த உரிமை அரசுக்கு உள்ளதா என்பது கேள்வி இல்லை.  ஆனால் இந்த தண்டனை சரியான முறையில் அளிக்கப்பட்டதா என்பது மட்டுமே கேள்வியாகும்.  இந்த குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை எங்கு யார் மூலம் நடைபெற்றது என்பது குறித்த விவரங்கள் உள்ளதா என்பதும் மற்றொரு கேள்வி” எனக் கூறி உள்ளார்.