காந்திநகர்:

குஜராத் மாநில தேர்தலில் வெற்றி பெற தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

உ.பி.யில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. 7 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ள அக்கட்சி பஞ்சாப்பில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பஞ்சாப் வெற்றிக்கு திட்டம் வகுத்த தேர்தல் நிபுணர் பிரசா ந்த் கிஷோரை எதிர்வரும் குஜராத் தேர்தலுக்கும் பயன்படுத்த காங்கிரஸ் முடிவு செ ய்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு விரைந்து தயாராகும் பணியை காங்கிரஸ் தொடங்கவுள்ளது. குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் 2007, 2012ம் ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்வியை தடுக்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் மூலம் முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோர் குஜராத்திற்கு புதியவர் அல்ல. 2012ம் ஆண்டில் தேர்தல் பிரச்சார யுக்தியை செயல்படுத்த அப்போதைய முதல்வர் நரேந்திரமோடி இவரை தான் பயன் படுத்தினார். அடுத்ததாக 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் கிஷோரிடம் மோடி ஒப்படைத்தார். பீகார், பஞ்சாப் தேர்தலை தொடர்ந்து குஜராத்திலும் காங்கிரசுக்கு வெற்றி கதையை கிஷோர் எழுதி தருவார் என்று குஜராத் காங்கிரசார் நம்பிக்கையுடன் உள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சின்வாகலே கூறுகையில்,“ பிரசாந்த் கிஷோரின் துல்லியமான செயல்பாடு பீகார், பஞ்சாப் தேர்தலில் வெற்றிக்கு கைகொடுத்தது. அடுத்து வரும் குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்கு இவர் கைகொடுப்பார்” என்றார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது டுவிட்டர் பதிவில்,“ பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவின் பணியும், துல்லியமான விமர்சனமும் வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை கண்டிப்பாக ஒப்புக் கொள்ள வேண்டும் ” என குறிப்பிட்டுள்ளார்.