சென்னை: தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு ஐசிடி தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்குபத்திரிகை டாட் காம் இணையதளம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல், ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. கல்வி கற்பிப்பதில் தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகளும் ஆன்லைன் மூலமும், கல்வித்தொலைக்காட்சி மூலம் பாடங்களை போதித்து வருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 6 பேருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், சிறப்பாக தகவல் தொழில்நுட்பம் உதவியுடன் கல்வி போதித்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த விருதுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஆசிரியர்களை தேர்வு செய்து என்சிஆர்டிக்கு பரிந்துரைக்கும். அந்த வகையில் தமிழக அரசிடம் இருந்து 6 ஆசிரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அவர்கள் 6 பேரும், 2018, 2019 என இரண்டு ஆண்டுகளுக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,
2018-ம் ஆண்டுக்கான விருது பெறும் ஆசிரியர்கள்
1.கணேஷ், கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம். இவர் கணினி வாயிலாக கணிதம் கற்பிப்பவர்.
2.தயானந்த், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் மாவட்டம். இவர் மாணவர்களுக்காக 170-க்கும் மேற்பட்ட அனிமேஷன் வீடியோக்களை உருவாக்கியவர்.
3.மனோகர் சுப்பிரமணியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,கரூர் மாவட்டம். இவர் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து மாணவர்களை அதைப் பயன்படுத்தப் பழக்கி கவனம் ஈர்த்தவர்.
2019-ம் ஆண்டுக்கான விருது பெறும் ஆசிரியர்கள்
1) தங்கராஜா மகாதேவன், பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். இவர், சூழலியல் சார்ந்த பாடங்களை அனிமேஷன் வீடியோக்கள் மூலம் கற்பித்து கவனம் ஈர்த்தவர்.‘
2) இளவரசன், வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். இவர், தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர்.
3) ஜெ.செந்தில் செல்வன், மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டம். இவர் ஜாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்ட கணிதப் பாடங்களை பவர்பாயிண்ட்மூலம் மாணவர்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்த்தவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.