காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரிலிருந்து பிமி ஆற்றில் படகில் சென்ற 25 பேர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர்.

100க்கும் மேற்பட்டோரை ஒரே படகில் ஏற்றிச் சென்றதால் பாரம் தாங்காமல் இந்த படகு ஆற்றில் கவிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

காங்கோவின் Mai-Ndombe மாகாணத்தில் இந்த ஆண்டில் இதுபோன்ற நான்காவது விபத்து இதுவாகும். இந்த முழுப் பகுதியும் ஆறுகளால் சூழப்பட்டிருப்பதால், பெரும்பாலான மக்கள் ஆறுகள் வழியாகப் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இவ்வருடத்தில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் இதுபோன்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

இருந்தபோதும், சாலைப் பயணச் செலவு மற்றும் காங்கோ பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் படகுகளில் பயணம் செல்கின்றனர்.

கடந்த அக்டோபர் மாதத்தில், காங்கோவின் கிழக்குப் பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 78 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல், ஜூன் மாதத்தில், கின்ஷாசா அருகே இதேபோன்ற விபத்தில் 80 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து லைஃப் ஜாக்கெட் உள்ளிட்ட மிதக்கும் உபகரணங்களை அரசாங்கத்திடம் இங்குள்ளவர்கள் கோரிவருகின்றனர்.