டில்லி

த்திய அரசு 18 மாநிலங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ. 6.366 கோடி பாக்கி வைத்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த 2005  ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை (100 நாள் வேலை திட்டம்) காங்   கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தியது. தற்போதைய பாஜக அரசு இந்த திட்டத்தை முறையாகச் செயல்படுத்தவில்லை எனக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த திட்ட நிதியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குக் கோடிக்கணக்கில் நிலுவையில் வைக்கப்பட்டு இருப்பதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தளத்தில்,

”கடந்த 2005 ஆம் ஆண்டு இதே நாளில் எங்கள் காங்கிரஸ்-ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டது.

மோடி அரசு இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலைத் திட்ட நிதியில் 33 சதவீதத்தைக் குறைத்திருக்கிறது. ஆயினும் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த திட்ட நிதியில் இன்னும் ரூ. 6,366 கோடியை நிலுவையில் வைத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்ட இந்த முதன்மைத் திட்டம் 14.42 கோடி தொழிலாளர்களுக்கு ஆதாரமாகத் திகழ்கிறது. இவர்களில் பாதிப்பேர் பெண்கள் ஆவர்.

இது கொரோனா தொற்றுநோய் கால பொது முடக்கத்தின்போது, கோடிக்கணக்கான தொழிலாளர்களின் உயிர்காக்கும் வலையாக இருந்தது. அப்போது இந்த திட்டம் மூலம் அவர்களின் வருமான இழப்பில் 80 சதவீதம் ஈடுசெய்யப்பட்டது”

என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.