நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு மோதல்: உச்சநீதி மன்றத்தில் பரபரப்பு

Must read

டில்லி:

நீதிபதிகள் நியமனங்களில் கொலிஜியம் அமைப்பிற்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாகி உள்ளது.

நேற்று உச்சநீதி மன்றத்தில்  நடைபெற்ற விவாதத்தின்போது, மத்திய அரசுக்கும், உச்சநீதி மன்றத்திற்கும் இடையே நடைபெற்று வந்த பனிப்போர் வெட்டவெளிச்சமாகியது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம் தேர்வு செய்து, அதை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து வருவது வழக்கம்.

ஆனால், சமீபகாலமாக நீதித்துறையில் மத்தியஅரசு தலையிட்டு வருகிறது. இதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நீதிபதி ஜோசப் நியமனத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில்,  உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் தலைமையில் நேற்று விசாரணை நடைபெற்றது.

நீதிபதிகளிடம் மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே. வேணுகோபால், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் 40 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளபோது, கொலிஜியம் 3 பேரை மட்டுமே பரிந்துரைத்து இருப்பதாக கூறினார்.

மேலும் கொலிஜியம் பரிந்துரை செய்யாமல் அரசால் ஒன்றும் செய்ய முடியாது என சுட்டிக்காட்டினார்.

உடனே நீதிபதிகள் அவரிடம், “கொலிஜியம் சிபாரிசு செய்த எத்தனை நீதிபதிகளின்  பெயர்கள் உங்களிடம் நிலுவையில் உள்ளன, சொல்லுங்கள்” என்றனர்.

அதற்கு அவர் தான் கண்டறிந்து சொல்வதாக பதில் அளித்தபோது நீதிபதிகள், “அரசு தரப்பு என்றால், நாங்கள் கண்டறிந்து சொல்ல வேண்டும் என்று சொல்லி விடுகிறீர்கள்” என்றும்,  “அரசுதான் நியமனங்கள் செய்யவேண்டும்” என்றும் கூறினார்.

மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ராமலிங்கம் சுதாகரையும் நியமிக்க கொலிஜியம் கடந்த மாதம் 19-ந் தேதி பரிந்துரை செய்தது. இதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது கே.கே. வேணுகோபால், “ஆய்வில் இருக்கிறது, விரைவில் உத்தரவு போடப்படும்” என கூறியபோது, நீதிபதிகள், “விரைவில் என்பது 3 மாதங்களாக கூட ஆகி விடும்” என்றனர்.

அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே நேற்று நடைபெற்ற விவாதங்கள், சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு நீதித்துறையில் தலையிடுவது மீண்டும் உறுதியானதாக சக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article