பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விவேக் ஓபராய் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளது.

narendra

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளன. அந்த வகையில் எம்.எஸ்.தோனி, சச்சின், மேரி கோம் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது.

அதேபோன்று முன்னால் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் தற்போது திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக தற்போது தயாரிக்கப்படுகிறது.

டீ விற்றது முதல் பிரதமரானது வரை நரேந்திர மோடியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கிய ஓமங் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை சந்தீப் சிங் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு பிஎம் நரேந்திர மோடி (PM Narendra Modi) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 7ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மகாராஷ்டிரா முதல்வரும், பாஜக உறுப்பினருமான தேவேந்திர பட்நாவிஸ் 23 மொழிகளில் வெளியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.