சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களை அடுத்தகட்டமாகப் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு இணையாக, சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் வசதிகளையும் சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களைத் தவிர, நாட்டின் மற்ற முக்கிய விமான நிலையங்களான டெல்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு ஆகியவை தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களை ஜிஎம்ஆர் குழுமமும், மும்பை விமான நிலையத்தை அதானி குழுமமும், பெங்களூரு விமான நிலையத்தை ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனமும் இயக்குகின்றன.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளையும் சேவைகளையும் மேம்படுத்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், கொல்கத்தா விமான நிலையத்தை மேம்படுத்துவதிலும் ஆர்வம் காட்டப்படுவதால், இரு விமான நிலையங்களையும் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம்

கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை விமான நிலையத்தின் இயக்குநர் நிறுவனத்தை மாற்ற வேண்டும் எனக் கோரி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்குக் கையாளும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவது அவசியம் என அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் 2025–26 நிதியாண்டில் 2.301 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 2.7 சதவீதம் அதிகமாகும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் பதிவான 2.254 கோடி பயணிகளின் எண்ணிக்கையையும் இது கடந்துள்ளது.

தற்போதுள்ள முனையங்கள் ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டுள்ளன. புதிய முனையம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தத் திறன் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா விமான நிலையத்தின் முக்கியத்துவம்

கொல்கத்தா விமான நிலையம், மேற்கு வங்கத்தின் முக்கிய விமானப் போக்குவரத்து மையமாக இருப்பதுடன், வடகிழக்கு இந்தியாவுக்கான முக்கிய நுழைவாயிலாகவும் விளங்குகிறது. பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை நாட்டின் ஆறாவது பரபரப்பான விமான நிலையமாக உள்ள இங்கு, ஆண்டுக்கு 2.1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

விமான நிலையங்களைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம், புதிய முதலீடுகள் கிடைப்பதுடன், அந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப அனுபவத்தையும் நிர்வாகத் திறனையும் பயன்படுத்தி உள்கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது.

11 விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க ஒப்புதல்

நாட்டின் 11 பிராந்திய விமான நிலையங்களைப் பொது-தனியார் கூட்டாண்மை முறையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு, கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற்ற PPP மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்படி, அமிர்தசரஸ்–காங்க்ரா, வாரணாசி–கயா–குஷிநகர், புவனேஸ்வர்–ஹுப்பள்ளி, ராய்ப்பூர்–அவுரங்காபாத், திருச்சிராப்பள்ளி–திருப்பதி என ஐந்து தொகுப்புகளாகப் பிரித்து, 50 ஆண்டுகளுக்கு விமான நிலையங்களின் இயக்கம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தனியார் பங்களிப்பு எப்போது தொடங்கியது?

இந்திய விமான நிலையங்களைத் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் நடவடிக்கை, 2003-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. அப்போது டெல்லி, மும்பை விமான நிலையங்களைப் பொது-தனியார் கூட்டாண்மை முறையில் மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்கீழ், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) 26 சதவீதப் பங்குகளைத் தக்கவைத்துக் கொண்டது. தனியார் நிறுவனங்கள் மீதமுள்ள 74 சதவீதப் பங்குகளைப் பெற்றன.

2006-ஆம் ஆண்டு போட்டி அடிப்படையிலான வருவாய்ப் பகிர்வு முறையில், டெல்லி விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஜிஎம்ஆர் தலைமையிலான கூட்டமைப்பும், மும்பை விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை ஜிவிகே தலைமையிலான கூட்டமைப்பும் பெற்றன. பின்னர், 2021 பிப்ரவரியில் மும்பை விமான நிலையத்தின் இயக்கப் பொறுப்பை அதானி குழுமம் ஏற்றுக்கொண்டது.

இரண்டாம் கட்டமாக, அகமதாபாத், லக்னோ, மங்களூரு விமான நிலையங்கள் 2020 அக்டோபர்–நவம்பர் மாதங்களிலும், ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் 2021 அக்டோபர் மாதத்திலும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தற்போதைய திட்டத்தின்படி, சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களும் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட்டால், அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளும் பயணிகளுக்கான சேவைகளும் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறையில் விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம், மேம்பாடு ஆகியவற்றைத் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும். அதேநேரத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல், கண்காணிப்புச் சேவைகள் ஆகியவை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.