பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து இன்று முதல் அனைத்து பஸ்களும் ஓட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக போக்கு வரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இதனால் தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியருக்கிறார்கள்.
இதற்கிடையே, வராகி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை கடந்த ஐந்தாம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்ததோடு, உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவு பிறப்பித்த்து. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்து, தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவ்வருகிறார்கள்.
இந்த நிலையில், சட்டசபையில் நேற்று விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி நிலுவை தொகை பொங்கல் பண்டிகைக்கு முன் அளிக்கப்படும் என்று அறிவித்ததோடு, தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிடும் என்று செய்திகள் பரவின.
ஆனால் அவரது இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்றும், வேலைநிறுத்தத்தை கைவிட வாய்ப்பு இல்லை என்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் அறிவித்தார்.
இந்த நிலையில், வராகி தொடர்ந்த பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், அரசு போட்டுள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள அரசு முன்வந்தால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில், ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தொ.மு.ச. தொழிற்சங்கத்தை சேர்ந்த சண்முகம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கலந்து கொண்டதாகவும், அனைத்து தரப்பினரிடமும் பேசியே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தெரிவித்ததாவது:
இந்த வழக்கை விரிவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கலாம் என்ற போதிலும், இந்த நேரத்தில் மக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. தொழிலாளர்கள் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கேட்கும் நிலையில் அரசு 2.44 மடங்கு ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. 0.13 மடங்கு ஊதிய உயர்வுதான் பிரச்சினையாக இருந்து வருகிறது. அரசு உடனடியாக 2.44 மடங்கு ஊதிய உயர்வை அமல்படுத்தட்டும். இன்று (அதாவது நேற்று) முதல் பேருந்துகளை இயக்குங்கள்.
பொங்கல் பண்டிகை நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பம். ஆகவே சிந்தித்து ஒரு நல்ல முடிவை வியாழக்கிழமை (இன்று) தெரிவியுங்கள்” என்று நீதிபதி தெரிவித்தார்.