சென்னை: கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் என். சங்கரய்யா மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான  என்.சங்கரய்யா உடல்நலக்குறைவால் காலமானார். 102 வயதான, அவரது மறைவு  செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
தோழர் என். சங்கரய்யா அவர்களது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்