சென்னை: திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில், திமுகவினர் பள்ளிகளுக்கு சென்று மாணவ மாணவிகளிடம் கட்டாய கையெழுத்து பெற்று வருகின்றனர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக பள்ளி மாணவர்களிடம் திமுக எம்எல்ஏ கையெழுத்து பெற்ற விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. கட்சி நிகழ்வை வகுப்பறைக்கு கொண்டு சென்றது தவறு என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருத்துவ படிப்புக்கு ட் தேர்வு கட்டாயம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த தீர்ப்பை வாங்கிக்கொடுத்ததில் முக்கிய பங்காற்றியவர், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினி சிதம்பரம். ஆனால், தமிழ்நாட்டில் நீட் விலக்கு வேண்டும் என திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் குரல் எழுப்பி வருகிறது. திமுகவும் தேர்தல் சமயத்தில், ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என கூறியது. ஆனால், அவர்களால் நீட்டுக்கு இதுவரை விலக்கு பெற முடியவில்லை.

இந்த நிலையில், திமுக சார்பில்,  நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து எனும் நீட் எதிர்ப்பு போராட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளது. அதன்படி, நீட் தேர்வுக்கு எதிராக 50 நாளில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப கடந்த சில நாட்களாக இந்த கையெழுத்து போராட்டத்தை திமுக செயல்படுத்தி வருகிறது.

இந்த கையெழுத்து போராட்டத்தில் மாணவர்களும் பங்கெடுத்துள்ளதாக கூறும் வகையில், திமுக எம்எல்ஏக்கள், பிரமுகர்கள், தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவ மாணவிகளிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், திமுக கட்சி சார்பாக நடத்தும் போராட்டத்தில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள். இதனை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கானது, நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லட்சுமி நாராயணன் அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கை தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறி அடுத்த வாரம் வழக்கமான வழக்காக இதனை தாக்கல் செய்யுமாறு கூறி உத்தரவிட்டனர்.

‘நீட்’க்கு எதிராக போராடுங்கள்: அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய திமுக எம்எல்ஏ…