சென்னை: கொடிக் கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, மேலும் 2 வழக்குகளில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அதை  தடுக்கவே அதன் இணை பொறுப்பாளரான அமர் பிரசாத் ரெட்டியை திமுக அரசு கைது செய்திருப்பதாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளன. இவை எதற்கும் முறையான அனுமதி பெறப்பட வில்லை. அப்படி இருக்கும்போது,  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு  நிறுவப்பட்ட கட்சியின் கொடிக் கம்பத்தை  சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று  அகற்றினர். அப்போது, அங்கு பாஜகவினருக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து,   கொடி கம்பம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததாக பாஜக பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இது கடும் விமர்சனங்களை எழுப்பியது. எதிர்க்கட்சியினரை திட்டமிட்டே திமுக அரசும், காவல்துறையும் கைது செய்வதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை, மேலும் 2 வழக்குகளில் போலீஸாரால் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே  செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது புகார் எழுந்திருந்தது. அந்தப் புகாரின் பேரில் தற்போது சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

(இந்த சம்பவத்தில், செஸ் ஒலிம்பியாட் போஸ்டரில் பிரதமர் படம் இடம்பெறாதது குறித்து தமிழக அரசை  நீதிமன்றம் கண்டித்தது. இந்த நிலையில், அது தொடர்பாக தற்போது காவல்துறை கைது செய்துள்ளது)

அதேபோல, வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நுங்கம்பாக்கம் போலீஸாரும் அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் புழல் சிறை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டி ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படம் இடம் பெற வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைப்படம் புறக்கணிப்பு! தமிழகஅரசின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி…