சென்னை: வேலியே மயிரை மேய்ந்த கதையாக, சென்னையில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிக்க போதைக் கும்பல்களுக்கு  உடந்தையாக இருந்த 22 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொலை மற்றும் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றன. சென்னையின் மூலை முடுக்கு, கால்வாய் ஓரம், குடிசை பகுதிகள் மற்றும் கல்லூரி, பள்ளிகள் உள்ள ஏரியாக்களில் போதைப்பொருள் நடமாட்டம் வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், மாமுல் வாங்கிக்கொண்டு போதைப்பொருள் கும்பலுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இது கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  ‘பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்’ என்னும் முதுமொழியை மெய்ப்பிக்கும் வகையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழகம் புதைகுழிக்குள் சென்று கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்கள் நடமாட்டம், பொதுவெளியில் பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல், இதுவே திமுக அரசின் 30 மாதகால சாதனை என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில்,  சென்னையில், போதைப்பொருட்கள்,  கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் , போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலக்கு உடந்தையாக இருந்ததாக 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் என 22 போலீசாரை  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை எடுத்துள்ளார்.