சென்னை:
சுவாதி கொலை வழக்கு குறித்து திருமாவளவன் பேசுவது சமூக அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும்  பெண்கள் அமைப்பொன்றை நடத்தும் கலைச்செல்வி என்பவர் இன்று மதியம் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், “ஒரு புறம் திருமாவை   ஹெச்.ராஜா அவதூறாக பேசுகிறார். இப்போது இந்த புகார். இந்துத்துவ அமைப்புகள் திருமாவை குறிவைத்து தாக்க ஆரம்பித்திருக்கின்றன” என்று விடுதலை சிறுத்தைகள் வட்டாரத்தில் இருந்து ஆதங்கக்குரல்கள் எழுந்திருக்கின்றன.
 

திருமாவளவன்
திருமாவளவன்

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் தரப்பினரை தொடர்புகொண்டோம். அவர்கள் கூறுவது இதுதான்:
“சென்னை ஐ.டி. ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆரம்பத்திலிருந்தே பல்வேறு மர்ம முடிச்சுக்கள்  அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.
சுவாதி கொலை செய்யப்பட்ட ஓரிரு நாட்களிலேயே  காமெடி நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் (இவரது மகள், பாஜக பொறுப்பில் இருக்கிறார்.) ஆகியோர், “ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்” என்று முகநூலில் பதிவு செய்தார்கள்.
ஒய்.ஜி. மகேந்திரன்
ஒய்.ஜி. மகேந்திரன்

அப்போதுதான் காவல்துறை விசாரணையைத் துவங்கிய நேரம். காவல்துறையினருக்கே யார் கொலையாளி என்பது தெரிந்திருக்கவில்லை. ஆனால் இவர்கள் “பிலால் மாலிக்” என்பவர்தான் கொலையாளி என்றார்.  பா.ஜ.க. ஆதரவாளர்கள் சிலரும் இதே கருத்தை பரப்பினார்கள்.
இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து, தங்கள் கருத்துக்களை முகநூலில் இருந்து நீக்கினார்கள்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கொலை குற்றவாளி என காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கிடையே சுவாதியின் நண்பர் முகம்மது பிலால் என்பவர் பற்றிய தகவல் வெளியானது.
ஏற்கெனவே “சுவாதியைக் கொன்றது பிலால் மாலிக்தான்” என்று விசாரணைக்கு முன்பே ஒய்.ஜி. மகேந்திரன் சொன்னதும், சுவாதியின் நண்பரான முகம்மது பிலால் என்பவர்  செய்தியில் அடிபட்டதும் ஆச்சரியமாக இருந்தது. அதாவது “பிலால்” என்கிற பெயர் ஒற்றுமை.
அதாவது சுவாதியின் நண்பர் முகம்மது பிலால் பற்றி ஏற்கெனவே அறிந்து, வேண்டுமென்றே அவரை இந்த வழக்கில் இழுப்பதற்காக “பிலால்” என்று ஒய்.ஜி. மகேந்திரன் உட்பட்டவர்கள் தகவல் பரப்பினார்களா என்ற கேள்வி எழுந்தது.
சுவாதி - முகம்மது பிலால்
சுவாதி – முகம்மது பிலால்

மேலும், இந்த பிலால் முகமதுவும் சுவாதியும் காதலித்ததாகவும், பதிவுத்திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் பரவின. அதோடு, கடந்த மாதம் சுவாதி ரம்ஜான் நோன்பு இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ராம்குமார் இந்து அமைப்புகளில் ஈடுபாட்டுடன் இருந்ததாகவும் ஒரு தகவல் உலாவந்தது.
மேலும் காவல்துறை விசாரணைக்கு சுவாதி குடும்பத்தினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. இதை உறுதிப்படுத்துவதுபோல, காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்வதாக சுவாதியின் தாயார், முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்தார்.
ஹெச். ராஜா
ஹெச். ராஜா

சுவாதியின் வீட்டுக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச் ராஜா உட்பட சில தலைவர்கள் வந்து ஆறுதல் கூறினார்கள்.
இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “சுவாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்” என்று பேசினார்.
இந்த நிலையில்தான், “சுவாதி பற்றி அவதூறாக பேசி சமூக அமைதியை கெடுக்க முயலும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும்” என்று மகளிர் அமைப்பொன்றை நடத்தும் கலைச்செல்வி, சென்னை ஆணையரிடம் இன்று மதியம் புகார் அளித்திருக்கிறார்.
இவரது புகாரின் பின்னாலும் பா.ஜ.க. இருக்குமோ என்கிற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.  இந்துத்துவக்கொள்கையில் ஈடுபாடு உடையவர்.  சுவாதி, ரம்ஜான் நோன்பு இருந்தால் என்பதை  அவதூறு  என்கிறார் இவர். நோன்பு இருந்ததாக சொல்வது அவதூறா.. அதென்ன பாவ காரியமா? தவிர, இப்போது திருமாவளவன் ஆதாரமில்லாமல் பேசுகிறார் என்று புகார் கொடுக்கிறாரே..  ஒய்.ஜி. மகேந்திரன் அவதூறு பரப்பியபோது எங்கே சென்றிருந்தார் இவர்?
கலைச்செல்வி லெட்டர்பேட்
கலைச்செல்வி லெட்டர்பேட்

இவரது அமைப்பின் பெயர், “தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கம்” என்பதாகும். இந்த அமைப்பின் லெட்டர்பேடில், சிங்கத்தின் மீது பாரதத்தாய் இருக்கும் படமும், பாரதியார் படமும் இருக்கிறது.
தவிர இந்த கலைச்செல்வி ஏற்கெனவே பா.ஜ.க.வில் இருந்தவர்.  சுவாதி கொலை வழக்கு குறித்து திருமாவளவன் கருத்துக்களை வெளியிடும்போதெல்லாம் பாஜகவின் ஹெச். ராஜா கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது”என்று விடுதலை சிறுத்தைகள் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள் தெரிவித்தார்கள்.
இதையடுத்து நாம், திருமாவளவன் மீது புகார் கொடுத்த கலைச்செல்வியை தொடர்புகொண்டு பேசினோம்.
கலைச்செல்வி
கலைச்செல்வி

அவர், “எனது பின்னால் எந்த ஒரு இந்துத்துவ இயக்கமும் இல்லை. சுவாதி வீட்டுக்கு பாஜகவினர் மட்டுமல்ல.. மற்ற பல கட்சியினரும் சென்றார்களே..!  தவிர என் தேசப்பற்றை வெளிப்படுத்தும்படியாக பாரதமாதா படத்தையும், மொழிப்பற்றை வெளிப்படுத்தும்படியாக பாரதி படத்தையும் என் லெட்டர்பேடில் வைத்திருக்கிறேன். இதில் என்ன தவறு?” என்று கேட்டவர், “நான் முன்பு பாஜகவில் இருந்தேன். இப்போது இல்லை” என்றும் கூறினார்.
மேலும், “இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் செய்யாததைச் சொல்வது அவதூறுதான் எந்த ஆதாரத்தை வைத்து சுவாதி ரம்ஜான் நோன்பு இருந்தார் என்று திருமாவளவன் சொல்கிறார். அப்படி ஆதாரம் இருந்தால் காவல்துறையிடம் கொடுக்க வேண்டியதுதானே!” என்று ஆவேசப்பட்ட  கலைச்செல்வி, ஒய்.ஜி. மகேந்திரன் மீது புகார் கொடுக்காததற்கான காரணத்தையும் சொன்னார்:
“எனக்கு அந்த விசயமே லேட்டாகத்தான் தெரியும். எப்போதுமே டிவி முன் உட்கார்ந்து நியூஸ் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா.. நெறைய வேலைகளுக்க நடுவேதானே சமூகப்பணியும் செய்ய வேண்டியிருக்கு!”