பெங்களூரு
கர்நாடகா மாநிலத்தில் பாஜக எம் எல் ஏ ஒருவர் கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பதாகப் புகார் பதியப்பட்டுள்ளது.
நாடெங்கும் மக்கள் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் கர்நாடக மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு நேற்று வரை 25.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு அதில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 22 லட்சம் பேர் குணம் அடைந்து 3.50 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
எனவே இங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவ்வகையில் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் தனது மகனுக்கு தடுப்பூசி போட பெங்களூரு பசவனகுடியில் உள்ள ஏ வி தனியார் மருத்துவமனைக்கு தொலைப்பேசி மூலம் விசாரித்துள்ளார். மருத்துவமனை ஊழியர் ஒரு டோச் தடுப்பூசி ரூ.900 எனவும் அதற்கு பசவனகுடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் விசாரித்தபோது இந்த தடுப்பூசிகள் பசவன்குடி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவி சுப்ரமணியா அலுவலகத்தில் இருந்து வருவதாகவும் அதை வாசவி மருத்துவமனை செவிலியர்கள் தான் போடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்பட்டது. இதில் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவுக்குத் தொடர்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பசவனகுடி சட்டமன்ற உறுப்பினர். ரவி சுப்ரமணியா மீதும், ரவி சுப்ரமணியாவின் நெருங்கிய உறவினர் தேஜஸ்வி சூர்யா மீதும் காவல் நிலையத்தில் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் புகார் அளித்துள்ளார். பசவனகுடி சட்டமன்ற உறுப்பினர். ரவி சுப்ரமணியா, “அந்த மருத்துவமனைக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பொறாமை கொண்ட சிலர் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தி வருகின்றனர். என் மீது குற்றம் கூறும் அந்த மருத்துவமனை ஊழியர் மீதும், அந்த சமூக ஆர்வலர் மீதும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
பெங்களூரு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பவண் கெடா மற்றும் ஸ்ரீநிவாஸ், “பாஜகவினர் இது போன்ற அசாதாரண சூழலில் மக்களுக்கு அவசியமான தடுப்பூசிகளில் கூட வருமானம் ஈட்ட முற்படுகின்றனர். வேண்டுமென்றே அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்டு பற்றாக்குறையை ஏற்படுத்தி தனியார் மருத்துவமனைகளின் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
பெங்களூரு நகரம் முழுவதும் தேஜஸ்வி அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் சென்று தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமான பதாகைகளே நிரம்பியுள்ளது. இதன் மூலம் அவர் தான் இதற்கு முக்கியக் காரணம் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அவர்கள் இருவருக்கும் தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன், அவர்களுடைய சட்டமன்ற பொறுப்பு மற்றும் தேஜஸ்வி சூர்யாவின் நாடாளுமன்ற பொறுப்பு உடனடியாக பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்று காரசாரமாகச் சாடியுள்ளனர்.
பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, “அந்த மருத்துவமனைக்கும் எனக்கும் அம்மருத்துவமனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பெங்களூரு மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதற்கு ஊக்குவிக்கும் விதமாகவே அந்த பதாகைகள் வைக்கப்பட்டன. வேறு எந்த உள்நோக்கமும் அதில் கிடையாது” என்று மறுத்துள்ளார்.
தேஜஸ்வி சூர்யா மற்றும் ரவி சுப்ரமணியா கருத்தைத் தொடர்ந்து தொடர்ந்து சமூக ஆர்வலர் வெங்கடேஷ், “காவல்துறை விசாரணையின் போது என் தொலைப்பேசியை சோதனை இடுகையில் யார் பொய்யாகப் பேசி வருகிறார்கள் என்று தெரியவரும்”எனக் கூறி உள்ளார். மொத்தத்தில் கர்நாடக மக்களை பாட்டாய் படுத்தும் கொரோனா பாஜக கட்சித் தலைவர்களை வேறு விதமாய் படுத்துவதாக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.