சென்னை: பள்ளிகளில் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி வைக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாலியல் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. பல பள்ளிகளில் ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்களும், பயிற்சிக்கு செல்லும் மாணவிகளிடம் பாலியல் சேட்டையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் கூறப்பட்டாலும், சில பள்ளிகள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பாலியல் தொடர்பான வழக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி மாணவ மாணவிகள் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என தமிழக அரசை அறிவுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து புகார்பெட்டி  தொடர்பான  நடவடிக்கை எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து புகார்பெட்டி   மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனர் கருப்பசாமி அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,  மாணவ மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் பெட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும் அறிவிப்பு பலகையில் அனைத்து பெண் போலீஸ் நிலையத்தில் தொலைபேசி எண்கள் இடம் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மாதத்திற்கு ஒரு முறையாவது மெட்ரிகுலேஷன், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் உள்பட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.