டெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான  தமிழகஅரசு இலவசமாக வழங்கிய நிலங்களுக்கான இழப்பீடை  தாருங்கள் என இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், தமிழ்நாடு நிதி அமைச்சர்  பிடிஆர் பழனிவேல் ராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், 2002ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதி மைச்சர்களின் மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று கூட்டினார். இந்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகஜனும் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

அப்போது,  கடந்த காலத்தில் மத்தியஅரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் இயங்க தமிழகஅரசு இலவசமாக நிலங்களை வழங்கியது. ஆனால், மத்தியஅரசு அவைகளை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டது. பல நிறுவனங்கள்  இப்போது தனியார்மயமாகிவிட்டதால், மத்தியஅரசுக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலங்களுக்கு, சந்தை மதிப்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.