அன்று –எம்.ஜி.ஆர்… இன்று -பிரியங்கா…

Must read

அன்று –எம்.ஜி.ஆர்…

இன்று -பிரியங்கா…

80 களில் தேர்தல் பிரச்சாரம் இப்போது உள்ளது போல் இருந்ததில்லை.சட்டமன்ற தேர்தலோ ,மக்களவை தேர்தலோ- பெரும்பாலும் வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல்-மே மாதங்களிலேயே நடைபெறும்.

இப்போது – இரவு 10 மணிக்குள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு உள்ளது.அந்த காலத்தில் இப்படிப்பட்ட  கெடுபிடிகள் எதுவும் கிடையாது.

தலைவர்கள் பெரும்பாலும் மாலையில் தான் பிரச்சார வாகனங்களில் ஏறுவார்கள்.குறிப்பாக எம்.ஜி.ஆர்.

மாலை 6 மணிக்கு மேல்தான் ஓட்டு வேட்டைக்கு புறப்படுவார்.விடிய விடிய கிராமம் ,கிராமமாக சுற்றி விட்டு,அதிகாலை 5 அல்லது 6 மணிக்கு தான் வேனில் இருந்து இறங்குவார்.

 

எம்.ஜி.ஆருக்கும், பிரியங்காவுக்கும் இங்கே என்ன சம்மந்தம் என்கிறீர்களா? இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அவரிடம், உ.பி.மாநிலத்தின் கிழக்கு பகுதியை ஒப்படைத்துள்ளார்-ராகுல்.

பொறுப்பேற்ற கையோடு ,நேற்று முன்தினம் லக்னோ சென்ற பிரியங்கா கட்சி நிர்வாகிகளை தினம் தோறும் சந்தித்து வருகிறார்.

‘’உங்கள் ஊரில் கட்சியின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?தேர்தலில் வெற்றி பெற கட்சியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும்? என்ற இரண்டு கேள்விகளை அவர்கள் முன் வைக்கிறார்.கருத்துக்களை குறித்து கொள்கிறார்.

லக்னோவின்- மால் அவென்யூவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை மாலையில் நடந்த கூட்டத்தில் இளைஞர்கள்,முதியவர்கள் என திரளான கூட்டம்.ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை பிரியங்காவிடம், மனதார பகிர்ந்து கொண்டனர்.அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு,தனது போனில்,அதனை சேமித்து கொண்டார்.

கூட்டம் முடியும் போது அதிகாலை 5-15 மணி.அதன் பின் வாசலில் திரண்டிருந்த செய்தியாளர்களுடன் சந்திப்பு.

‘’இந்த தேர்தலில் உங்களுக்கும்,மோடிக்கும் இடையேதான் போட்டியா?’’என்று நிருபர் குழாம் ஒட்டுமொத்தமாக வினா எழுப்ப-

‘’அரசியலில் நான் இன்னும் நிறைய  படிக்க வேண்டியுள்ளது.இந்த தேர்தலில் –ராகுல் ஜிக்கும், மோடிஜிக்கும் இடையே தான் போட்டி’’என்று கூறி விட்டு நகர்ந்தார்.

பிரியங்காவின் மாரத்தான் கூட்டங்கள் ,இது போன்றே தொடரும் என்று தெரிகிறது.

‘’பிரியங்காவின் இந்த சந்திப்புகள் தொடர்ந்தால் உ.பி.யில் நாங்கள் 40 பிளஸ் தொகுதிகளை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது.இதனை அவரிடமும் சொல்லி விட்டேன்’’ என்று குதூகலித்தார்- கூட்டத்தில் கலந்து கொண்ட அபிஷேக் என்ற தொண்டர். இவரது தந்தை இரண்டு முறை எம்.எல்.ஏ,வாக இருந்தவர்.

–பாப்பாங்குளம் பாரதி

More articles

Latest article