காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உ.பி.மாநிலம் அமேதி தொகுதியில் வழக்கம் போல் இந்த முறையும் போட்டியிடுகிறார்.

மொழி,இனம் மற்றும் கலாச்சாரத்தால் பிரிந்து கிடக்கும் வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் இணைக்கும்  வகையில்- தெற்கே ஏதாவது ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

கேரள காங்கிரசார் அங்குள்ள வயநாடு மக்களவை தொகுதியை ராகுலுக்கு ‘ரிசர்வ்’ செய்து வைத்து விட்டு-காத்திருக்கிறார்கள்.

வயநாடு தொகுதி கடந்த இரு முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும்.

ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது  உறுதியாகியுள்ள நிலையில்-

கம்யூனிஸ்ட்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வயநாடு தொகுதியில் இடதுசாரி கூட்டணி கட்சிகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர் ,முழுவீச்சில் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் வயநாட்டில் ராகுல் போட்டியிட்டால் –தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு குந்தகம்  ஏற்படும் என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளார்-இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா.

அவரது கருத்து இது:

‘’கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் காரர் வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போட்டியிடுவது –ஒரு பெரிய விஷயமல்ல.ஏனென்றால் கேரளாவில் நாங்கள் (இடதுசாரிகள் –காங்கிரஸ்) எதிர் எதிர் முனைகளில் இருக்கிறோம்.ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து கொண்டு ராகுல்காந்தி- எங்களை எதிர்த்து போட்டியிடுவது –தேசிய அளவில்  எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை பெரிதும் பாதிக்கும்’’என்று தெரிவித்துள்ளார் –ராஜா.

ராகுல் என்ன செய்யபோகிறார்?

–பாப்பாங்குளம் பாரதி