சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைப்புகளை சேர்க்க குழு அமைத்து மாநில பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்துவருகின்றன. இதற்கிடையில், திமுக கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழர், தேமுதிக என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், அதிமுக பாஜக தலைமையில் என்டிஏ கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில், மேலும் பல சில அமைப்புகளை சேர்க்கவும் பாஜக தலைமை முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி என்.டி.ஏ. கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடு வர இருக்கிறார். இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மார்ச் மாதத்தில் தமிழ்நாடு வரவிருக்கிறார்.
அதற்கிடையில் பாஜக தரப்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி அமைப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணியில் கடந்தத் தேர்தலில் இருந்த கட்சிகள் தொடரும் எனச் சொல்லப்பட்டுவருகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை வெளியேறிய கட்சிகள் மீண்டும் இணைக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் இணைய விரும்பும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கூட்டணியில் சேர்க்க பாஜக மாநிலத் துணைத் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026 சிறப்பாக எதிர்கொண்டு மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவின் தலைவராக V.P.துரைசாமி Ex M.P. மாநில துணைத் தலைவர், G.பாலச்சந்திரன் Ex DGP, மாநில செயற்குழு உறுப்பினர் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]