சைபராபாத்
தெலுங்கானா மாநில காவல்துறையினரைத் தரகர்கள் எனக் கூறிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் குக்கு காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானாவில் மாடுகளைக் கடத்துவது அதிகரித்துள்ளது. அவ்வகையில் ஷம்ஷாபாத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட ஒரு வாகனத்தில் மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாடுகளை மீட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு கால்வதுறையினர் உதவி வருவதாக கடுமையாகச் சாடி உள்ளார்.
ராஜா சிங், “சைபராபாத் பகுதியில் உள்ள கோத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு துணை ஆய்வாளர் இந்த கும்பல்களுக்கு போக்குவரத்துக்கு வாகனங்களை வழங்குவதை நாங்கள் கண்டறிந்தோம். காவல்துறையினர் ஏன் இந்த நபர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள் ? எதற்காக அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கிறார்கள்?
சம்பளம் போதாது என்றால், நாங்கள் பிச்சை எடுத்து அவர்களுக்கு பணத்தை கொடுப்போம். ஆனால் பசு படுகொலைக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாவம் செய்ய வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன், இது போன்ற தரகு வேலையை அவர்கள் நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
ராஜா சிங் இவ்வாறு பேசியது காவல்துறையினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சைபராபாத் காவல்துறை ஆணையர் விசி சஜ்ஜனார், “தற்போது காவல்துறையைக் குறை கூறுவது ஒரு பேஷனாக உள்ளது. இவ்வாறு காவல்துறை குறித்து மட்டமாக விமர்சித்த ராஜா சிங்கை நான் எச்சரிக்கிறேன். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.,
அரசியலமைப்பின்படி உயர்ந்த பதவியான சட்டப்பேரவை உறுப்பினர் இவ்வாறு குறை கூறுவது, குறிப்பாக காவல்துறையினர் மீது குற்றம் சாட்டுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் உள்ளூர் காவல்துறையினர், அதிகாரிகள் ஆகியோர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ” எனத் தெரிவித்துள்ளார்.