தாம்பரம்:

டுவிட்டரில் மட்டும் கருத்து கூறினால் மட்டும் போதாது. களத்திற்கு வாருங்கள் என நடிகர் கமலஹாசனுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில், தமிழக அரசை ராஜினாமா செய்ய வற்புறுத்துங்கள் என்று டுவிட்டு செய்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் நடிகர் கமலஹாசன்.

இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான், டுவிட்டரில் கருத்து தெரிவிப்பதோடு முடிந்துவிடுகிறது என்று  கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம்  சீமான்  கூறியதாவது:-

தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக ‘நீட்’ தேர்வில் ஓராண்டு காலத்துக்கு மத்திய அரசிடம் விலக்கு கேட்பதற்கு காரணம் இருக்கிறது என்றும்,   அதே காரணம் அடுத்த ஆண்டும் இருக்கும். அதனால்தான் அதற்கு நிரந்தர விலக்கு கேட்கிறோம்.

சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஆனால், அவர்  நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அதே இடத்தில் வைக்க குரல் கொடுப்பேன் என்று சொல்லட்டும். அவருடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன் என்றார்.

மேலும், ஊழலை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் செய்வோம் என கமல்ஹாசன் தெரிவிக்கட்டும், களத்திற்கு வரட்டும்…  நாங்களும்  அதில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருக்கிறார். அவர்  கூறுவது வெறும் பேச்சுதான்.

ராஜினாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் போல் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.