“அரசியலைக் கடந்து பரந்த மனிதாபிமானத்துடன் செயல்படும் பிரியங்கா மீது வன்மம் ஏன்?”

Must read

வாரணாசி: விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட உம்பா கிராமத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் நேரடியாக சென்று, பிரியங்கா காந்தி, மக்களை சந்தித்த நிகழ்வை பாரதீய ஜனதாவோடு சேர்ந்து எதற்காக சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் போன்ற எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார் கட்டுரையாளர் பிஸ்வஜீத் பானர்ஜி.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த பல்லாண்டுகளாக இருந்துவரும் நிலப்பிரச்சினையை ஒட்டி, சர்ச்சைக்குரிய நிலத்தை கிராம் பிரதான் அமைப்பு கைப்பற்ற முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 10 விவசாயிகள் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, இந்தப் பிரச்சினையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எடுத்துக்கொண்ட பிரியங்கா காந்தி, காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்ற வாரணாசி மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார். பின்னர் உம்பா கிராமத்திற்கே நேரடியாக சென்று மக்களை சந்திக்க முயன்றவர் தடுக்கப்பட்டார்.

பின்னர், கடும் அழுத்தத்திற்கு பின்னரே, சில உம்பா கிராமவாசிகள் சுனார் கிராம விருந்தினர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு பிரியங்காவை சந்திக்க வைக்கப்பட்டனர். பின்னாட்களில் அந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று அந்த மக்களை சந்தித்தார் பிரியங்கா காந்தி.

இந்த விஷயத்தில், மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் பாதிக்கப்பட்டவர்களை உம்பா கிராமத்திற்கே நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதோடு, பண உதவிகளையும் செய்தபோதும், பிரியங்காவை விமர்சிப்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் அவர் அதிக முன்னிலைப் பெறுவதை அக்கட்சிகள் விரும்பவில்லை என்பதே உண்மை. பிரியங்கா முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று மாயாவதி விமர்சனம் செய்ததிலிருந்தே இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அதேசமயம், அந்தக் கட்சிகள் ஜுலை 18ம் தேதி தொடங்கிய உத்திரப்பிரதேச சட்டமன்ற கூட்டத்தொடரில் இப்பிரச்சினை எழுப்பி அவையை முடக்க முயலவில்லை. மாறாக, தங்களின் தனிப்பட்ட நலன்களில்தான் அக்கறை செலுத்தின.

பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடியைப் பொறுத்தமட்டில், தங்களின் கட்சியின் மூத்த தலைவர் ஆஸம்கானை ‘நில மாஃபியா’ என்று அறிவிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்துப் பிரச்சினை கிளப்புவதிலேயே கவனம் செலுத்த, இன்னொரு முக்கிய கட்சியான பகுஜன் சமாஜ், அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் ஆனந்த் குமாரின் சொத்துக்கள் தாக்கப்பட்டது குறித்தும் பிரச்சினை எழுப்பியது.

ஆக, இந்த இரு கட்சிகளும் சட்டமன்றத்தில் உம்பா படுகொலைகள் குறித்து கவனத்தை ஈர்க்காமல், தங்களின் சுயநலன் மீதே கவனம் கொண்டிருந்தன. ஆனால், இப்பிரச்சினையை சிறந்த முறையில் கையாண்டுவரும் பிரியங்கா காந்தியின் மீது தாக்குதல் தொடுக்கின்றன. இதன்மூலம் அக்கட்சிகளின் உண்மை முகமும் அம்பலமாகியுள்ளது” என்றுள்ளார் கட்டுரையாளர்.

More articles

Latest article