பொகாட்டோ: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கொலம்பிய நாட்டில், 1000 சிறைக் கைதிகளை வீட்டுச் சிறையில் வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு சிறைத்துறை அமைச்சகம் சார்பில் கூறப்படுவதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக, சிறைக் கைதிகளை வீட்டுக் காவலில் இருக்க சொல்கிறோம். வில்லாவிசென்சியோ சிறையில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்நிலையில் அதே சிறையில் உள்ள மற்ற 13 கைதிகள், இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு நிர்வாகி உள்பட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில்தான் கைதிகளை வீட்டுக் காவலுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம்.

நாங்கள் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். அதில் முழு வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாதுதான். ஆனாலும் முயற்சி செய்கிறோம்.

கைதிகளில் ஊனமுற்றோர், கர்ப்பிணி, 60 வயதுக்கு மேலானவர்கள், குழந்தையுடன் உள்ள பெண் கைதிகள் மற்றும் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதயப் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாதவாறு அவர்களை வீட்டு காவலுக்கு மாற்றுகிறோம்.

அரசு ஆணைப்படி, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை நிறைவு செய்தவர்கள் அல்லது 40% சிறை தண்டனை அனுபவித்தவர்கள் வீட்டுச் சிறை என்ற திட்டத்திற்கு தகுதியானவர்கள். இந்த நடவடிக்கைகள் அடுத்த 6 மாதங்கள் நீடிக்கும்” என்றனர்.