கொலம்பியா,
கொலம்பியாவில் நடைபெற்ற விமான விபத்தில்  76 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும தகவல்கள் கூறுகின்றன.
கொலம்பியாவில் பிரேசில் கால் பந்து வீரர்கள் உள்பட 81 பேர் சென்ற விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 76 பேர் உயிரிழந்தனர். 5 பேர்  காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
நாடுகளுக்கிடையேயான கால்பந்து போட்டியின், இறுதிப்போட்டியில் விளையாட சென்ற பிரேசில் கால்பந்து வீரர்கள் இவ்விபத்தில் சிக்கி உள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம்
விபத்துக்குள்ளான விமானம்

விமானம் மெடெலின் சர்வதேச விமானநிலையத்திற்கு சென்றபோது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ்-146 ரக குறுகிய தொலைவு விமானம்,  பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 72 பயணிகள் மற்றும் பணியாளர்கள் 9 பேர் என மொத்தம் 81 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானத்தில் பிரேசிலின் சர்பிசியோன்ஸ் ரியல் கால்பந்து அணியை சேர்ந்த வீரர்களும் பயணம் செய்தனர்.
 
கொலம்பியாவில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேக மூட்டமாகவே காணப்பட்டு வருகிறது. இவ்வாறான சீதோஷ்ண நிலையில்  81 பேருடன் சென்ற ஏரோஸ்பேஸ் விமானம் கொலம்பியாவின் மெடலின் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இரவு 10.15 மணியளவில்  விழுந்து நொறுங்கியது.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் கொலம்பியா அரசின் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால்,  விபத்து ஏற்பட்ட பகுதியானது மலைப்பாங்கான பகுதி என்பதனால் மீட்பு பணியில் உடனடியாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது.
விபத்தில் பலியான பிரேசில் கால்பந்து வீரர்கள்
விபத்தில் பலியான பிரேசில் கால்பந்து வீரர்கள்

முதல்கட்டமாக மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகாப்டர்கள் மோசமான வானிலை காரணமாக திரும்பியது. இதனை யடுத்து வானிலை சீரானதும் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறத் தொடங்கியது.
தரைவழி மீட்பு பணியிலும் வீரர்கள் ஈடுபட்டனர். முதல்கட்டமாக 25 பேரது சடலங்கள் மீட்கப்பட்டது என்றும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக 76 பேர் பலியானதாகவும், 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.