சென்னை:
சென்னையில் கல்லூரி அருகே நேற்று பட்டப்படகலில் மாணவி குத்திக் கொல்லப்பட்டதற்குக் காரணம், ஒருதலைக்காதல் என்று தெரிய வந்துள்ளது.
சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு அஸ்வினி (வயது 19) என்ற மகளும், அபி என்ற மகனும் இருந்தனர். குடும்பத்தலைவர் மோகன் சிலவருடங்கள் முன்பு இறந்துவிட்டார்.
சங்கரி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். மகன் அபியை படிக்க வைக்க முடியாத நிலை. ஆகவே அவர், அதே பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்க்கிறார்.
அஸ்வினி, பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்து படித்து வந்தார். .
தனலட்சுமி நகர் 14-வது தெருவில் வசிக்கும் அழகேசன் (25) என்ற வாலிபருக்கும், அஸ்வினிக்கும் காதல் ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள அழகேசன் சென்னை முகப்பேர் மாநகராட்சி அலுவலகத்தில் கொசுமருந்து அடிக்கும் ஊழியராக பணியாற்றி பார்த்து வருகிறார்.
இந்த காதல் விவகாரம் அஸ்வினியின் தாயார் சங்கரிக்கு தெரிய வந்தது. அழகசன் மதுவுக்கு அடிமையானவர் என்பதால், அவரை மறந்துவிடு என்று தெரிவித்தார்.
இதையடுத்து அஸ்வினி, அழகசனிடமிருந்து ஒதுங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த அழகேசன், அஸ்வினியை விரட்டி, விரட்டி தொல்லை கொடுத்தார்.
இதையடுத்து அழகேசன் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் அழகேசனை அழைத்து கண்டித்தார்கள். , “இனிமேல் அஸ்வினியின் பின்னால் சுற்ற மாட்டேன்” என்று அழகேசனும் எழுதிக் கொடுத்தார்.
ஆனால் அதன் பிறகும் அழகேசன், அஸ்வினிக்கு தொல்லை கொடுத்து வந்தார். “என்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், கொன்றுவிடுவேன். நானும் செத்துப்போய்விடுவேன்” என்று மிரட்டினார்.
இதையடுத்து அஸ்வினி சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசிக்கும் உறவினரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டார். அங்கிருந்து கடந்த ஒருவாரமாக கல்லூரிக்கு சென்று வந்தார்.
இதனால் அஸ்வினியை பார்க்க முடியாமலும், செல்போனில் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த அழகேசன், அஸ்வினி படிக்கும் கே.கே.நகர் மீனாட்சி கல்லூரி வாசலில் அவரை பார்க்க தினமும் வந்து நிற்பார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் அஸ்வினி கல்லூரியை விட்டு வெளியே வந்தபோதும், அங்கு காத்திருந்தார் அழகேசன். அவரைப் பார்த்ததும், தனது தோழிகளோடு அஸ்வினி வேகமாக நடக்க ஆரம்பித்தார். . கல்லூரி எதிரே உள்ள லோகநாதன் தெருவிற்குள் அஸ்வினி சென்றார்.
பின்தொடர்ந்து சென்ற அழகேசன், அஸ்வினியிடம், “ஏன் என்னைவிட்டு ஒதுங்குகிறாய்?” என்று ஆத்திரத்துடன் கூச்சலிட்டார்.
அதற்கு அஸ்வினி தன்னை மறந்துவிடும்படி கூறியிருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அழகேசன் அஸ்வினியின் கையைப் பிடித்தும், கூந்தலை பிடித்தும் சண்டை போட்டார்.
அப்போது அழகேசன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரை அடி நீளம் உள்ள கத்தியை திடீரென்று எடுத்து அஸ்வினியின் கழுத்தில் குத்திக் கிழித்தார். ஆட்டை அறுப்பதுபோல் கழுத்தை அறுத்தார்.
அஸ்வினி, தன்னை காப்பாற்றும்படி கதறினார். அதோடு கீழே சாய்ந்தார். அந்த சமயத்தில் அழகேசன், பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை அஸ்வினி மீது ஊற்றி உயிரோடு எரிக்கவும் முயற்சித்தார்.
இதற்கிடையே அஸ்வினியின் கதறலைக் கேட்டு, அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். ஆனால் அழகேசன் அஸ்வினியை குத்திய கத்தியையும், மறைத்து வைத்திருந்த இன்னொரு கத்தியையும் எடுத்து, “யாரேனும் அருகில் வந்தால் குத்திவிடுவேன்” என்று மிரட்டினார்.
ஆனால் பொதுமக்கள் அழகேசனை மடக்கிப்பிடித்து அடித்து உதைத்தனர். பிறகு கட்டி வைத்தனர்.
அடுத்து அஸ்வினியை பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஸ்வினி இறந்துவிட்டார்.
இதற்குள் காவல்துறைக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். காயத்தோடு தெருவில் கிடந்த அழகேசனை மீட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அழகேசன் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலோடு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் போலீசார் அழகேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
அஸ்வினி கொலை செய்யப்பட்ட இடத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது. தடய அறிவியல் நிபுணர்கள் ரத்தக்கறையை சேகரித்தார்கள்.
கடந்த 2016-ம் வருடம் ஜூன் மாதம் 24-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் என்ஜினீயர், இதுபோல் காதல் பிரச்சினையில் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
அதற்கும் முன்று காரைககால் பெண்மணி விநோதினி என்பவர் மீது, அவரை ஒரு தலையாக காதலித்தவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்குக் காரணம், பெண்களை டார்ச்சர் செய்து திருமணம் செய்துகொள்ளலாம் என்று பெண்ணடிமைத்தனத்தை விதைக்கும் திரைப்படங்கள என்று சமூக ஆர்வலர்கள குற்றம்சாட்டுகிறார்கள்.