ஈரோடு:
ரோடு மாவட்டத்தில் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் 225 கிராம ஊராட்சி பகுதிகளை சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது. மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது கிராமப்புறங்களிலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.

கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாதது, ஊரடங்கு உத்தரவினை முறையாக கடைபிடிக்காதது, வெளி ஆட்கள் உள்ளே வந்து செல்வது உள்ளிட்ட காரணங்களால் தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளது.

இந்தநிலையில் மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளிலும் வெளி ஆட்கள் உள்ளே வராத வகையில் சீல் வைத்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி அளவிலான கொரோனா நோய் தொற்று கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் ஊராட்சி தலைவர், செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர், போலீசார் ஆகியோர் இடம் பெற வேண்டும். இக்குழுவினர் நோய் தொற்று கண்காணிக்கும் வகையில், வீடு வீடாக சென்று கண்காணிக்க வேண்டும். கிராம ஊராட்சி அளவிலான கொரோனா நோய் தொற்று சிகிச்சை மையத்தினை ஏற்படுத்த வேண்டும்.

பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பரிசோதனை நடத்தி சிகிச்சை மையத்தில் தங்க வைக்க வேண்டும். சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீட்டில் இருந்தே கொண்டு வர வேண்டும். சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு வாரகாலத்திற்கு ஊராட்சியின் அனைத்து எல்லைகளிலும் கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளியாட்கள் யாரும் ஊராட்சியில் நுழையாத வகையிலும், ஊராட்சியை சேர்ந்தவர்கள் தேவையின்றி வெளியே செல்லாத வகையிலும் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களான கோவில் பகுதி, மைதானங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.