மதுரை,

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் பன்னாட்டு குளிர்பான ஆலைகளான கோக், பெப்சி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு தேவையான தண்ணீர்  அருகே உள்ள  தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் வெளிநாட்டு குளிர்பான ஆலைகளை மூடவேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து பிரபாகர் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் ஒரு பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும்,  தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், ஆழ்துளை கிணற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீரை லிட்டருக்கு 3.75 பைசாவுக்கு வழங்க கூடாது என்றும் கோரி இருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடை கடந்த ஆண்டு நவம்பர் 21ந்தேதி குளிர்பான நிறுவனங்களுக்கு  இடைக்கால தடை விதித்தது.

தடையை எதிர்த்து குளிர்பான நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன.  அதில் தடை விலக்கக்கோரி கூறியிருந்தனர்.

தடையை விலக்கக்கூடாது என்று எதிர்மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாமிரபரணி தண்ணீர் பொதுமக்களின் குடிநீருக்கே கிடைக்காத நிலை உள்ளது. அதனால் தாமிரபரணி தண்ணீரை சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு கொடுத்து மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலையை உருவாக்கி விடக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

 

அதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது குளிர்பான நிறுவனங்கள் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள மேலும் பல ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றன என்றும்,  குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதாகவும் வாதிடப்பட்டது. தாங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து உபரி நீரை மட்டுமே எடுப்பதாகவும் விளக்கம் கூறியது.

அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்,

இன்று மதுரை உயர்நீதி மன்றம், தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகளுக்கு நீர் எடுக்க தடை இல்லை என உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே தாமிரபரணி ஆறு வறட்டுபோய் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில்,  மதுரை ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பு அந்த பகுதி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் எழுச்சி  போராட்டத்தை தொடர்ந்து,  தமிழகம் முழுவதும் வணிகர்கள் கோக், பெப்சி குளிர்பானங்கள் விற்பனைக்கு  தடை விதித்துள்ள நிலையில், குளிர்பானங்கள் உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளது மதுரை ஐகோர்ட்டு கிளை என்பது குறிப்பிடத்தக்கது.