கோவை: கோவையில் ஏற்கனவே திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையான நிலையில், இன்று மீண்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது. பாழடைந்த வீட்டில் திமுகவினர் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ‘ஹாட் பாக்ஸ்’ பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1000க்கும் மேற்பட்ட ஹாட்பாக்ஸ்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
கோவை மாநகராட்சியை கைப்பற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், திமுகவினர் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர். இறுதிக் கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6மணியுடன் முடிவடையும் நிலையில், வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் , கொலுசு, குக்கர் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான ஏராளமான படங்கள், வீடியோக்கள் வெளியான நிலையில், தென்னந்தோப்பில் உள்ள தகர குடோனில் ஏராளமான ஹாட் பாக்ஸ்கள் மறைத்து வைத்ததும் தேர்தல் பறக்கும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோவை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஆயிரக்கணக்கான ஹாட்பாக்ஸ்கள் அடைக்கப்பட்ட பெரிய பெரிய அட்டை பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்து, அதை பறிமுதல் செய்து. விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் ஹாட் பாக்ஸ்களை பதுக்கி வைத்திருப்பதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பாஜகவினர் வலியுறுத்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் 13 பெரிய பெட்டிகளில் ஹாட் பாக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 10 பெரிய பெட்டிகள் நிறைய ஹாட்ஸ் பாக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.