டெல்லி: காவிரி-கோதாவிரி நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு உள்பட  5 மாநில அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை நாளை ஆலோசனை நடத்துகிறது.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நதிகள் இணைப்பு திட்டம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,  கோதாவரி – காவிரி – பெண்ணாறு  நதிகள் இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய நீர்வள ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான வரைவு  திட்ட அறிக்கை கடந்த 2019ம் ஆண்டே  தயாரிக்கப்பட்டது. அதன்படி,  நதி இணைப்பு திட்டத்தின் செலவில், 90 சதவீதத்தை மத்திய அரசே மேற்கொள்ளும். 10 சதவீத தொகையை தான் சம்பந்தப்பட்ட மாநில அரசு மேற்கொள்ள வேண்டி இருக்கும் என அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இது தொடர்பாக தென் மாநிலங்களான கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களுக்கு தண்ணீர் பகிர்ந்தளிப்பது குறித்து  விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடத்தப்பட்ட ஆலோசனையின்போது, தமிழகத்திற்கு 83 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்குவதாக திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், ஆனால், தமிழ்நாட்டிற்கு 200 டிஎம்சி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த சூழலில், நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தமிழ்நாடு உள்பட 5 மாநில அதிகாரிகளுடன்  நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.   இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.  தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், நதி நீர் இணைப்பிற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, நாளை அதற்கான கூட்டம் நடைபெறுகிறது.