கோவை: ‛கொங்குநாடு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும்’ தீர்மானம் போட்டு தமிழ்நாட்டில் சர்ச்சையை தொடங்கியது பாஜகதான் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொங்குநாடு என்ற புதிய கோரிக்கையை கொங்கு பகுதிகளைச் சேர்ந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. முன்னதாக திமுக அரசு, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருவதும், சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் குறித்து பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில், பாஜக தமிழ்நாட்டை பிரித்து கொங்குநாடு என்ற பெயரில் புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்று சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

கொங்குநாடு இந்த‘ திடீர் கோரிக்கை தமிழ்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொங்குநாடு பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சில கட்சிகள் போராட்டங்களும் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் கோவை வடக்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் கொங்குநாடு புதிய மாநிலமாக உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசு தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கெளரவத்தை பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தை பயன்படுத்தி நிர்வாக ரீதியாக தமிழகத்தை மாநில மறுசீரமைப்பு செய்து மேற்கு மண்டலத்தை புதிய மாநிலமாக கொங்குநாடு உருவாக்க வேண்டும் என இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல தேசிய பக்தி மிக்க உணர்ச்சி முழக்கமான ஜெய்ஹிந்த் -ஐ திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சட்டமன்ற கூட்டத்தில் அவமதித்தற்கும்,

அதற்கு உடந்தையாக இருந்த தமிழக அரசிற்கும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு இலவசமாக வழங்கும் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு சென்னை மண்டலங்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு செய்தும், கோவை மாவட்டத்திற்கு பாகுபாட்டுடன் குறைவாக ஒதுக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் விரைவாக தடுப்பூசி முகாம் நடத்தி மாநில அரசு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல அவிநாசி மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்து அன்னூர் என்ற புதிய சட்டமன்ற தொகுதியை உருவாக்க வேண்டும் எனவும்,

மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தல்

உள்பட பல தீர்மானங்கள் பாஜக கோவை வடக்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொங்குநாடு தனி மாநிலம் கோரிக்கைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, மாநில பாஜக தலைமை  சற்று தனிமாநில கோரிக்கையில் இருந்து ஒதுக்கிய நிலையில்,  பாஜகவின் வடக்கு கோயம்புத்தூர் பிரிவு மேற்கு பிராந்தியத்தை ஒரு தனி மாநிலமாக மாற்றக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.  இதுவே சர்ச்சையாகி உள்ளது.

கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை! ஏஎன்எஸ் பிரசாத்