கோவை:

நொய்யல் ஆற்றில் பழுதாகியுள்ள 16 தடுப்பணைகளை உடனே சரி செய்யக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் பழனிசாமி அளித்த மனுவில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவையை நொய்யல் ஆறு பூர்த்தி செய்கிறது.

170 கி.மீ தொலைவுக்கு பயணிக்கும் நொய்யல் ஆறு, கோவை மாவட்டத்தில் மட்டும் 78 கி.மீ தொலைவுக்கு பயணிக்கிறது.

புதுக்காடு,சித்திரை சாவடி,குனியாமுத்தூர் வெள்ளாளூர், சிங்காநல்லூர் மற்றும் இருகூர் உட்பட 16 இடங்களில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக நீரை சேமித்து வைக்க இந்த தடுப்பணைகள் பயன்பட்டு வந்தன. தற்போது இந்த தடுப்பணைகள் பழுதாகி, குப்பை மற்றும் மணல் தேங்கி பயனற்று கிடக்கின்றன.

அனைத்து தடுப்பணைகளையும் சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கெண்டு வரவேண்டும்.

மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மறும் நிலத்தடி நீர்மட்டம், ஏரி, ஆறுகளின் நீர்மட்டம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள நவீன கருவிகளைக் கொண்டு சர்வே செய்யும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நீர் சர்வே செய்ய ரூ.3.54 கோடியில் 60 துணை டிவிஷனல் அலுவலகங்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படும் என்று மாநில அரசு ஏற்கெனவே அறிவித்தது. இன்று வரை இந்த அறிவிப்பை கண்டுகொள்ளவில்லை.

எங்களால் நீரின் அளவை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. இது போன்ற நவீன கருவிகளைக் கொண்டு நீர் இருப்பை அறியும் முறை கர்நாடகா மற்றும் கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளாக அமலில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.