டில்லி

கொட்டாங்கச்சி என அழைக்கப்படும் தேங்காய் ஓடு ரூ. 1365- க்கு அமேசான் இணைய தளத்தில் விற்கப்படுகிறது.

இயற்கைப் பொருட்களின் மீதான ஆர்வம் திரும்பி வருவது குறிப்பிடத்தது. ஆனால் அதை வைத்து பணம் செய்ய நினைப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர். உதாரணத்துக்கு சிறு தானியங்கள் மீது தற்போது ஆதரவு பெருகி வருகிறது. அதை பயன்படுத்தி பலரும் இயற்கை மற்றும் ஆர்கானிக் என பெயரை சேர்த்து சிறு தானியங்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.   சிறு தானியங்கள் என்பது எப்போதுமே ஆர்கானிக் உணவு என்பது பல நகரவாசிகளுக்கு தெரிவதில்லை.

அவ்வகையில் அமேசான் கொட்டாங்கச்சி என அழைக்கப்படும் தேங்காய் ஓடுகளை இயற்கை கோப்பை என விற்று வருகிறது. பலரும் அது இயற்கை தானே இதில் செய்தி என்ன உள்ளது என யோசிக்கலாம். கொட்டாங்கச்சி இயற்கையான கோப்பை என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் அந்த கொட்டாங்கச்சி ஆன்லைன் நிறுவனமான அமேசான் மூலம் ரூ.1365க்கு விற்கப்படுவது தான் செய்தியாகும்.

இதன் விலை ரூ. 3000 எனவும் இதற்கு 50%க்கும் மேல் கழிவு அளித்து ரூ.1365க்கு விற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. அத்துடன் இது இயற்கையான தேங்காய் ஓடு என்பதால் இதில் பல விரிசல்களும் நசுங்கலும் சரியான அமைப்பு இல்லாமையும் இருக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இந்த கொட்டாங்கச்சியை மாதத் தவணையிலும் வாங்கலாம் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேங்காய் ஓடு தூக்கி எறியப்படும் ஒரு பொருளாகவே மதிக்கப்படுகிறது. ஆகவே சமூக வலை தளங்களில் பலரும் இந்த கொட்டாங்கச்சிகள் குப்பைத் தொட்டியில் கிடந்தவைகளாக இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விளம்பரத்தில் பல வாடிக்கையாளர்கள் இதை புகழ்ந்துள்ளனர். அதற்கு 4 மற்றும் 5 நட்ச்சத்திர தர வரிசை அளித்துள்ளனர்.

கொட்டாங்கச்சியை தூக்கி எறியும் இந்தியர்கள் பலர் இதை படித்து விட்டு சிரிப்பதா அழுவதா என்னும் நிலையில் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.