சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டிடுவதா? கூட்டணி அமைப்பதா? என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும இரு மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகளின் கூட்டணி, தொகுதி பேரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நடிகர் மகல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தலில் களமிறங்கும் வகையில் முனைப்பு காட்டி வருகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே தலைநிமிரட்டும் தமிழகம் என்ற தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

இந்த நிலையில்,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.  இன்றைய கூட்டத்தில்,  பிப்ரவரி 21ம் தேதி அன்று நடைபெற உள்ள  கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா குறித்து கமல்ஹாசன் இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசிப்பார் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும்,  சட்டமன்ற தேர்தல் குறித்தே முக்கிய ஆலோசனை நடைபெறும் என்றும், தேர்தலில் தனித்து போட்டிடுவதா? கூட்டணி அமைப்பதா? எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கமல்ஹாசன்  முடிவெடுப்பார்  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும்,  ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.